அம்ருத் 2.0 முதற்கட்ட சோதனை ஓட்டம்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. சோதனை ஓட்டமாக பழைய பகிர்மான குழாய் மூலம் காலை வேலையிலும் புதிய பகிர்மான குழாய் மூலம் மாலை வேலையிலும் குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் இன்று முதல் திட்டமிடப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொண்டனர். அதன்படி இன்று மாலை அனைத்து புதிய பகிர்மான குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குளித்தலை நீதிமன்றம் அருகே சாலை ஓரத்தில் புதிய பகிர்மான குழாய் பதிக்கப்பட்டதிலிருந்து காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு மணி நேரமாக காவிரி குடிநீர் வீணாகி சாலையின் ஓரத்தில் ஓடி அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலக கட்டிட வளாகத்தில் புகுந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் குளித்தலை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த பொதுபணி மேற்பார்வையாளர்கள் பார்வையிட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதை நிறுத்தினர். குளித்தலை நகராட்சி பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தில் முதற்கட்ட சோதனையில் குடிநீர் குழாய் உடைந்த நிகழ்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.