கோவை: சந்தை உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம்!
சந்தைப்பேட்டை பகுதியில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாத உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம்.;

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்படி, மேற்கு மண்டலம், வார்டு எண்.42-க்குட்பட்ட தவசி நகர் பகுதி அருகில் அமைந்துள்ள சந்தைப்பேட்டையில் குப்பைகளை தெருவில் வீசுவதாகவும், குப்பையை எரிப்பதாகவும் வந்த புகாரையடுத்து, மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் வீரன் இன்று சந்தைப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சந்தைப்பேட்டை உரிமையாளர் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சந்தை உரிமையாளருக்கும், அப்பகுதி மக்களுக்கும் சுகாதார ஆய்வாளர் வீரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி அலுவலர்களும் உடனிருந்தனர். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தெருக்களில் வீசுவது, குப்பைகளை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.