தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 21 குழந்தைகள் பிறந்தன
மருத்துவமனை
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் 21 குழந்தைகள் பிறந்தன 8 பேருக்கு அறுவை சிகிச்சை, 13 பேருக்கு சுகப்பிரசவம் ஆனது. தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மட்டும் புத்தாண்டில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 8 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும், 13 பேருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்ட பின்னர் இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பகுதி, காச நோய் பிரிவு ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சராசரியாக மாதத்துக்கு 1,200-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது சராசரியாக தினமும் 40 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. இங்கு பிரசவ வார்டு, குழந்தை பிரசவித்த பின்னர் தனி வார்டு, குழந்தைகளுக்கு தனி வார்டு என சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சை மாநகராட்சி பகுதியில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. கல்லுக்குளம், மகர்நோன்புச்சாவடி, கரந்தை சீனிவாசபுரம் ஆகிய இடங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த 4 மருத்துவமனைகளில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று இரவு 9 மணி வரை எந்த குழந்தையும் பிரசவம் ஆகவில்லை. ஆனால் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மட்டும் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறுகையில், தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தினமும் 40 குழந்தைகள் வீதம் சராசரியாக பிறக்கின்றன. மாதத்துக்கு 1,200 குழந்தைகளுக்கு மேல் பிரசவம் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு 9 மணி வரை ராசா மிராசுதார் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 8 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமும்,13 குழந்தைகள் சுகப்பிரசவம் மூலம் பிறந்துள்ளன" என்றார்.