செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் மீண்டும் 23 அடிக்கு மேல் உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது என பொதுப்பணித்துறை என தகவல்;
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர் மட்டம் 24 அடியும் கொண்டது. வடகிழக்கு பருவமழையால், இந்த ஏரி 23 அடிக்கு மேல் நிரம்பியதையடுத்து, கடந்த 14ம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. அதிகபட்டசமாக, வினாடிக்கு 6,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஏரியின் நீர் மட்டம், 21 அடிக்கு கீழ் குறைந்ததை அடுத்து, ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில், விட்டு விட்டு பெய்யும் மழையால், ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, நீர் மட்டம் 23.13 அடியாகவும், கொள்ளளவு 3.41 டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து 1,050 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் மீண்டும் 23 அடிக்கு மேல் உயர்ந்ததால், ஏரியை நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிமாக கண்காணித்து வருகின்றனர். மழை பெய்தால் உபரி நீரை, மீண்டும் திறக்க ஆலோசித்து வருகின்றனர்.