தஞ்சாவூரில், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாணவர் சங்கம் முற்றுகைப் போராட்டம்
போராட்டம்;
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு, மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுத் தரப்பில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய நிதி தாமதமாக வருவதாகக் கூறி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர், அண்ணா சாலை நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு அருகிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வாயிலுக்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது, அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற சங்கத்தினரை காவல் துறையினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகைப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வசந்த், மாவட்டச் செயலாளர் ஹரிஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் நித்யசூர்யா, ஜெனிஃபர், மகேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் நவசூர்யா, ராகுல், தர்ஷினி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 12 மாணவிகள் உள்ளிட்ட 47 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.