விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் 25 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி
எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் நீர்ப்பாசனம் இன்றி தவித்து வரும் நிலையில் அருகிலுள்ள மணிமுத்தாற்றில் தடுப்பணை கட்டி ஆற்றில் நீரை சேமித்து அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதன் காரணமாக விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வலியுறுத்ததின் காரணமாக மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் 25 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதனடிப்படையில் மேமாத்தூர் அணைக்கட்டு மற்றும் பரவளூர் தடுப்பணைக்கும் தற்போது அமைய உள்ள தடுப்பணைக்கும் இடைப்பட்ட தூரம், மண் பரிசோதனை செய்யப்பட்ட முடிவு, ஆற்றில் நீர் வரத்து கொள்ளளவு , இந்த தடுப்பனையின் மூலம் பயனடையும் விவசாய நிலங்களின் பரப்பளவு போன்ற விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு இடம் தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை வெள்ளாறு வடிநில கோட்டம் சார்பில் மணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெள்ளாறு வடிநில கோட்டம் நீர்வளத்துறை விருத்தாசலம் செயற்பொறியாளர் அருணகிரி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் எத்திராஜுலு, திமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், பாஸ்கரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.