பட்டப்பகலில் துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட 3 வட மாநில பெண்கள்..
மாமல்லபுரத்தில் பட்டப்பகலில் துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட 3 வட மாநில பெண்கள்..
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி மஞ்சுளா(வயது48), இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மஞ்சுளா தனது குடும்ப தேவைக்காக மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று ரூ.55 ஆயிரம் பணம் எடுத்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் அதனை போட்டு கொண்டு வங்கி வாசல் படியை தாண்டி செல்லும் போது, அங்கு வங்கி வாசலில் வாடிக்கையாளர் போர்வையில் அமர்ந்திருந்த 3 வட மாநில பெண்கள், மஞ்சுளா சுதாரிக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் கவரை பிளேடால் கீறி அறுத்துவிட்டு, ரூ 55 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்ப முயன்றனர், சுதாரித்து கொண்ட மஞ்சுளா தன்னுடைய பணத்தை எடுத்து கொண்டு அப்பெண்கள் ஓட்டம் பிடிப்பதை கண்டு, கையில் பணத்துடன் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை துரத்திபிடித்தார். நடுரோட்டிலேயே தலைமுடியை பிடித்து மஞ்சுளா அப்பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்தார். அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிவிடவே ஒரு ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பிறகு தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பெண்களையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்புத் மாவட்டம், ஜான்டிகடை கிராமத்தை சேர்ந்த நிஷா(வயது35), பூஜா(வயது30), பிரவீனா(வயது40) என தெரிய வந்தது. ஒரே ஊரை சேர்ந்த இந்த 3 பெண்களும், அரசு பஸ்சில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பர்சு பறிப்பது போன்ற குற்ற செயல்களில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பிறகு மஞ்சுளாவிடம் திருடி சென்ற ரூ.55 ஆயிரம் பணத்தை அந்த பெண்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் ஒப்படைத்தனர். பட்டப்பகளில் வட மாநில பெண்கள் வங்கி வாசலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களில் பூஜா என்பவரை ஒரு சிங்கப்பெண் போல் துரத்தி சென்று மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மஞ்சுளாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் பொதுமக்கள் பாராட்டினர்.