சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் போராட்டம்

தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கம் அழைப்பு

Update: 2024-11-01 10:39 GMT
சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ. 3 ல் சென்னையில் நடத்தவிருக்கும் போராட்டத்தில் பங்கேற்க   தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளனர். சட்டப் பாதுகாப்பு கோரி சென்னையில் நவ.3ல் போராட்டம் நடத்துவது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம், அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கம் சார்பில்,  தமிழ்நாடு பிராமணர் சங்க  மாநிலத் தலைவர் திருவொற்றியூர் நாராயணன் கூறியதாவது: பிராமணர்கள் மீதான அவதூறு பிரச்சாரம் மற்றும் பொய் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், வரும் நவ.3ல்  காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அனைத்து பிராமணர்களும் கலந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகளிடம் சட்டப் பாதுகாப்பு கோரி நடக்கும் இப் போராட்டத்தில் மாநிலத்திலுள்ள மாவட்ட அமைப்புகள் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில அமைப்பு அலுவலகத்தில் தெரிவிக்கவும். மாநில பொதுச் செயலாளர் கோவை ரமேஷ், மாநில பொருளாளர் பருத்திப்பட்டு நரசிம்மன், மாநில மகளிரணி செயலாளர் பிரபாவதி, மாநில இளைஞரணி செயலாளர் சௌரிராஜன், மாநில தலைமை நிலைய செயலாளர் மயிலை பாலு ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணாச்சலம், பொதுச் செயலாளர் பாலசடாட்ஷரம் ஆகியோர் கூறியதாவது: பிராமணர்களில்  மிகவும் பரிதாபத்திற்குரியது, தொன்றுதொட்டு உலக நன்மைக்காக இறை பணி ஆற்றி வருபவர்கள்  ஆதி சைவ சிவாச்சாரியார்கள்,வைகானச, பாஞ்சராத்ர பட்டாச்சாரியார்கள் அடங்கிய அர்ச்சகர்கள் சமூகம்தான். பொருளாதாரம், கல்வி, சமூக அந்தஸ்து ஆகிய எல்லா நிலைகளிலும் மிகவும் பின் தங்கியவர்களாக  உள்ளனர். நாட்டில் பல நேரங்களில் இழிவு படுத்தப்படுவதும், வன்மத்துக்கு ஆளாவதும், கேலி, கிண்டல் செய்யப்படுவதும் ஆதி சைவ பிராமணர்கள் உள்ளிட்ட அர்ச்சகர்கள் சமூகம்தான். எனவே, பிராமணர்களின் நலனுக்காக நவ.3ம் தேதி சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலச் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.

Similar News