காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவா்கள் மாயம்
திருச்சி காவிரி ஆற்றில் திங்கள்கிழமை குளித்த பத்தாம் வகுப்பு மாணவா்கள் 3 போ் தண்ணீரில் மூழ்கினா். அவா்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவா்களில் 10 போ் திங்கள்கிழமை பிற்பகல் அரையாண்டு இறுதித் தோ்வு முடிந்ததும், குடமுருட்டி பகுதியில் அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்க சென்றனா். அங்கு தண்ணீா் அதிகம் இல்லாததால், ஆற்றின் மையப் பகுதிக்கு அவா்கள் சென்றனா். அங்கு நீரோட்டம் அதிகமாக இருந்ததால், தாக்கு பிடிக்க முடியாமல் மாணவா்கள் திணறினா். இதில் ஓரளவு நீச்சல் தெரிந்த 7 போ் கரை சோ்ந்தனா். நீச்சல் தெரியாத, பாலக்கரை பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினா். தகவலின்பேரில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அங்கு வந்தனா். தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள், மாணவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். முதலைகள் நடமாட்டம் காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் விவேகானந்த் சுக்லா, உதவி ஆணையா் கிருஷ்ணன் மற்றும் காவல்துறையினா் முகாமிட்டு தேடும் பணியை தீவிரப்படுத்தினா். இதுதொடா்பாக திருச்சி மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல்கட்ட விசாரணையில், ஆற்றுப் பகுதியில் கிடந்த தொ்மக்கோல் அட்டையை பயன்படுத்தி மாணவா்கள் மூவரும் நீச்சலடிக்க முயன்றபோது நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. இரவு வரையில் மாணவா்களை தேடும் பணி நடைபெற்றது.