காவிரியாற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் இருவர் உடல் மீட்பு
24 மணி நேரம் ஆகியும் ஒரு மாணவனின், உடல் இன்னும் மீட்கப்படவில்லை.
திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரும் மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் அரையாண்டு தேர்வு முடிந்ததையடுத்து காவிரி ஆற்றில் குளிக்கதிட்டமிட்டுள்ளனர். அதன்படி பள்ளி முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். குடமுருட்டி பகுதியில் உள்ள அய்யாளம்மன் படித்துறையில் இறங்கிய அவர்கள், ஆற்றின் நீரோட்டம் காரணமாக ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஓரளவு நீச்சல் தெரிந்த எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த அருண் சஞ்சய்,தருமநாதபுரம் சே.பெர்னல் இம்மானுவேல், கல்லுக்குழியை சேர்ந்த வா.திருமுருகன், ரா.ஹரிஹரன், காஜாப்பேட்டையை சேர்ந்த ஆ.நத்தானியல் மற்றும் ஆ.சரவணன் ஆகிய 7 மாணவர்கள் தட்டு தடுமாறி நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். ஆனால், நீச்சல் தெரியாத திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்த சலீம் மகன் ஜாகிர் உசேன், பீமநகரை சேர்ந்த செந்தில் மகன் விக்னேஷ், எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிம்பு ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் ஜாகிர் உசேன் மற்றும் சிம்பு ஆகிய இரு மாணவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விக்னேஷ் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாணவர்களை தேடும் பணிக்காக முக்கொம்பு மேலனை காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகியும் விக்னேஷ், உடல் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் இவர்களது உறவினர்கள் அய்யாயாளம்மன் படித்துறை பகுதியில் சோகத்தோடு காத்திருக்கின்றனர்.