இருசக்கர வாகனங்கள் திருடிய 3வாலிபர்கள் கைது!
காவேரி பக்கத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு
காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக மோட்டார்சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி துரைபெரும்பாக்கம் சந்திப்பு பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்களிடம் மோட்டார்சைக்கிள் தொடர்பான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததுடன், முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் காவேரிப்பாக்கம் அருகே கடப்பேரியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 21), பெரிய கிராமத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (19) மற்றும் ஆற்காடு கிராம்பாடியை சேர்ந்த அருண்குமார் (22), என்பதும், அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் மோட் டார்சைக்கிள் திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் 4 மோட்டார்சைக்கிள் என 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் ராணிப் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.