திருக்கடையூர் ரேக்ளா ரேஸ் பந்தயத்திற்கு குதிரை மாடுகள் பயிற்சி
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்காக ஓட்டப்பயிற்சி அளித்து தயார் செய்யப்படும் குதிரைகள், மாடுகள்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஆண்டுதோறும் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு காணும் பொங்கல் அன்று புகழ்பெற்ற மாடு, குதிரை பந்தயம் எனப்படும் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவது வழக்கம். இந்த பந்தயத்தில் மயிலாடுதுறை , நாகப்பட்டினம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்கும். இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியில் பங்கேற்கும் குதிரைகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை நடைபயிற்சி அதனைத் தொடர்ந்து குளத்தில் நீச்சல் பயிற்சி, கொள்ளு , கேரட் உள்ளிட்ட கலவை கொண்ட சத்தான உணவுகள், 10 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா வண்டியில் பூட்டி அதிவேகமான ஓட்டப்பயிற்சி என்று குதிரைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் இந்த பணிகளுக்கு ஒரு குதிரைக்கு மட்டும் 500 ரூபாய் வரையில் செலவு பிடிக்கும் நிலையில் பணத்திற்காக இப்படி தயார் செய்யவில்லை என்றும் தமிழர்களின் பாரம்பரியமான இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் குதிரை மற்றும் மாடுகளை தீவிரமாக தயார் செய்து வருவதாக தெரிவித்தனர்.