ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை

அறிவியல்

Update: 2025-01-02 11:44 GMT
நாசா நிறுவனம் நடத்திய விண்கற்கள் கண்டறியும் ஆராய்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற மாணவர்கள் மூன்று புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விண்வெளி அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை தொலைநோக்கி உள்ளிட்ட அறிவியல் கருவிகள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.  இந்த மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தா.கலைச்செல்வன் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களான பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் துறை மாணவர்களான தி.ஷியாம், கு.பிரபாகர், பி.அகிலேஸ்வரன்,  ரா.சந்தியா, பிஎஸ்சி வேதியியல் துறை மாணவர் க.கோபாலன் ஆகியோர், National Aeronautics and Space Administration (NASA) நிறுவனம், International Astronomical Search Collaboration - HARDIN SIMMONS UNIVERSITY (IASC) மற்றும் Pan-STARRS INSTITUTE FOR ASTRONOMY UNIVERSITY OF HAWAII நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய போட்டியில், Open Space Foundation (OSF) உதவியோடு தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவாக கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சி கடந்த 25.10.2024 முதல் 19.11.2024 வரை நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ps1 மற்றும் ps2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட படத்தொகுப்புகள் (Image sets) ஒரு வாரத்திற்கு வழங்கப்படும். அந்தப் படத் தொகுப்புகளில் நான்கு படங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தொகுப்பில் காணப்படும் விண் கற்களை கண்டறிந்து தரவுகளாக (MPC report) சமர்ப்பிக்க வேண்டும்.  இதில், தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 21 குழுக்கள் கலந்து கொண்டது. அதில், 6 குழுக்கள் வெற்றிகரமாக தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆய்வை செய்து முடித்தனர். அந்த 6 குழுக்களில், பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் சார்பில் பங்கேற்றவர்களும் ஒரு குழுவாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு NASA, IASC, Pan STARRS மற்றும் OSF இணைந்து சான்றிதழ்கள் வழங்கியது.  மேலும், இந்த மாணவர்கள் தீபாவளியின் போது வெடிகளில் வெளிப்படும் வாயுக்களை சென்சார்கள் மூலமாக அளவிட்டு ஒரு ஆராய்ச்சியை செய்துள்ளனர். மாணவர் செயற்கைக்கோள் உருவாக்குவதற்கான பணிகளையும் செய்து வருகின்றனர். புதிய விண்கற்களை கண்டுபிடித்ததன் மூலம் அதற்கான பெயர் சூட்டும் வாய்ப்பையும் இந்த அறிவியல் மன்றம் பெற்றுள்ளது.  மேலும், பேராவூரணி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று தொடர்ந்து அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News