மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் வீராணம் தைலானூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 37). இவர், கடந்த 4-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. அதேபோல், வீமனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது தொடர்பாக வீராணம் போலீசில் 2 பேரும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சேலம் வரகம்பட்டியை சேர்ந்த மோகனவேல் (22), உடையாப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணி (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், கைதான 15 வயது சிறுவன், சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மற்ற 2 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.