வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது!
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவில்பட்டி ராஜிவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக டிஎஸபி ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசாரும், மேற்கு போலீசாரும் இணைந்து நேற்று ராஜிவ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நடமாட்டம் காணப்பட்ட வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 10 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 715 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்களான பெரியகுருசாமி (27), குருசாமி (23) என்பதும், இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அங்கு புகையிலை பொருட்கள் வாங்க வந்த, பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி முருகராஜ் (52) என்பரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.