ரமலான் முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
செஞ்சி வாரச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை;

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். செஞ்சியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காய்கறிகளை விவசாயிகள் செஞ்சி வாரச் சந்தைக்கு விற்பணைக்கு கொண்டு வருவது வழக்கம்.மேலும் செஞ்சி பகுதியை சுற்றி காடுகள் மற்றும் மலைகள் சூழ்ந்துள்ளதால் அங்கு வளா்க்கப்படும் ஆடுகள் இயற்கையாக வளரும் தாவரங்களை உட்கொள்வதால் ஆடுகளின் கறி சுவையாக இருக்கும் என்கின்றனா். எனவே செஞ்சி பகுதியில் வளரும் வெள்ளாடுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.இந்த ஆடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, கடலூா், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் அதிகாலை முதல் காத்திருந்து வாங்கிச் செல்வா்.வரும் 31-ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு உள்ளூா் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். ஒரு வெள்ளாடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. செம்மறியாடு ரூ 8 ஆயிரம் முதல் ரூ 12 ஆயிரம் வரை விற்பனையானது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் ரூ. 3 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனா்.