கோவை: பிறவி குறைபாடுடைய 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்தல்!
கோவை அரசு மருத்துவமனையில் பிறவி குறைபாடுடைய 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுக்காவைச் சேர்ந்த முத்துக்குமாரின் 3 வயது மகன் ரிஷ்வந்த், பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட்ட நிலையில், சிறுவனுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கால் பொருத்தப்பட்டது. உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைகள் மற்றும் நடைப்பயிற்சியின் விளைவாக, ரிஷ்வந்த் தற்போது தானாகவே நடக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளான். உலகத் தரத்தில் அளிக்கப்பட்ட இந்த சிகிச்சையின் மூலம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை மூட்டுப் பொருத்திய பயனாளிகளில் ரிஷ்வந்தே மிகச்சிறிய வயதுடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.