ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும்...  தஞ்சாவூரில் 3 இடங்களில் போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-27 16:52 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 15ஆவது ஊதியம் ஒப்பந்தத்தை உடனடியாக பேசி சம்பளம் உயர்வை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய சங்கப் பொருளாளர் எஸ்.ராமசாமி, ஏஐடியுசி மத்திய சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக பேசி சம்பளம் உயர்வு அறிவிக்க வேண்டும். 1.9.23 முதல் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும். சிபிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை கைவிட்டு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.  போக்குவரத்து கழகத்தில் 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் கழக ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில்        தனியார்மய மற்றும் காண்ட்ராக்ட், ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட முப்பதாயிரம் காலிப்பணியிடங்களை நேரடி நியமனங்கள் நிரப்பப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு இரண்டு உரிமங்கள் வேண்டும் என்ற நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும். மினி பேருந்துகள் உள்ளிட்டு அனைத்து பேருந்துகளையும் போக்குவரத்து கழகங்களே இயக்க வேண்டும்.  அவரவர் கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு பணி ஆண்டுதோறும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு 2023 ஜூலை முதல் வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதி, விடுப்பு மற்றும் பணிக்கொடை தொகை உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர்   துரை.மதிவாணன்,     கும்பகோணம் சங்க தலைவர் என்.சேகர், சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த.காரல்மார்க்ஸ    உள்ளிட்டோர்  சிறப்புரையாற்றினார்கள்.  ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன்,  எம்.தமிழ் மன்னன்,ஆர்.ரெங்கதுரை,  சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் முருக சக்தி, நகர் கிளை நிர்வாகி சித்தார்த்தன், சிஐடியு ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கரந்தை புறநகர் கிளை முன்பு காலை 6 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளைத் தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் அர்ஜுனன், நிர்வாகிகள் டி.முருகானந்தம், ராஜசேகரன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி வி.திருநாவுக்கரசு        உள்ளிட்டோர் பங்கேற்றனர்.              அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளைத் தலைவர் எஸ்.செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணை செயலாளர் பி.வெங்கடேசன், தஞ்சை கிளை செயலாளர் ஏ.எஸ்.பழனிவேல், ஓய்வு பெற்ற நல அமைப்பு செயலாளர் எஸ்.ஞானசேகரன், அனைத்து ஓய்வுதியர் சங்கத் தலைவர் என்.குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News