காற்றின் வேகம் அதிகரிப்பு, தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை 

மீனவர்கள்;

Update: 2025-05-28 16:52 GMT
தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காற்றின் வேகம் அதிகரிப்பால் 3 ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை . கடற்பகுதியில்  காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் திங்கள்கிழமை (மே.26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி, மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.   இதையடுத்து, புதன்கிழமை மூன்றாவது நாளாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மனோரா, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், காரங்குடா, கழுமங்குடா, மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத் தெரு உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த,  3000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் தணிந்த பிறகு, அநேகமாக (இன்று) வியாழக்கிழமை மாலை நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே  ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாததால், மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கடற்கரை ஓரங்களில், கரை வலை மூலம் பிடிக்கப்படும் சிறிய வகை மீன்கள் மட்டுமே தற்போது கிடைத்து வருவதால், மீன் விலை அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் குளங்களில் பிடிக்கப்படும் மற்றும் வளர்ப்பு மீன்களான  கெண்டை, திலேபியா, விரால் போன்ற மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுவாக மீன் விலை உயர்வால் அசைவப் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Similar News