கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது - 11 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2025-04-27 01:29 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார் நேற்று புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் நாலாட்டின்புதூர் கோபாலபுரம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (33), கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜசேகரபாண்டியன் (32) மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் 2பேரையும் கைது செய்தும், இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தும், அவர்களிடமிருந்த 11 கிலோ 150 கிராம் கஞ்சா, ரொக்கப் பணம் ரூ.1400 மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News