விபத்தில் இறந்த 3 கல்லூரி மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
திருப்பூர் ஊத்துக்குளி அருகே விபத்தில் இறந்த 3 கல்லூரி மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்;
விபத்தில் இறந்த 3 கல்லூரி மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சத்திற்கான நிதி உதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி சாம்ராஜ்பாளையம் பிரிவு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களான பெரியசாமி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற மாணவர் குருராஜ் என்பவர் மூளைச்சாவு அடைந்தார். இந்தநிலையில் விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் விபத்தில் பலியான மாணவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை விபத்தில் இறந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கினர்.