சாய்பாபா கோவிலில் திருடிய 3 பேரிடம் இருந்து 5 வெண்கல சிலைகள் மீட்கப்பட்டன.

போலீசார் விசாரணை;

Update: 2025-05-24 04:50 GMT
சேலம் மாசிநாயக்கன்பட்டியில் சாய்பாபா கோவில் உள்ளது. கடந்த மாதம் 7-ந் தேதி மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த சிறிய அளவிலான சாய்பாபா, வராகி அம்மன், துர்க்கை அம்மன் உள்ளிட்ட 5 வெண்கல சாமி சிலைகள் மற்றும் ரூ.500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக பனமரத்துப்பட்டியை சேர்ந்த சங்கர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொண்டலாம்பட்டியை சேர்ந்த சந்தோஷ், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிகரன் ஆகியோருடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேல் விசாரணையில் அவர்கள் இருவரும் வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தது தெரிந்தது. இந்த வழக்கு தொடர்பாக சங்கர், சந்தோஷ், ஹரிகரன் ஆகியோர் கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 5 வெண்கல சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Similar News