கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை

நாகர்கோவில்;

Update: 2025-10-29 14:31 GMT
குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. 2025-26ம் கல்வியாண்டுக்கான போட்டிகளின் கருப்பொருள் ‘பசுமையும் பாரம்பரியமும்’ ஆகும். ஐந்து பிரிவுகளாக 1 மற்றும் 2-ம் வகுப்பு, 3, 4, 5-ம் வகுப்பு, 6, 7, 8-ம் வகுப்பு, 9, 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு என்று போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல்நிலை போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுவட்ட, வட்டார அளவில் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த நிலைக்குத் தகுதி பெறுகின்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில அளவில் அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ‘கலையரசன்’ மற்றும் ‘கலையரசி’ போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறப்பாகச் செயல்படும் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு குமரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் தொடங்கியது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தொடக்கி வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று (29ம் தேதி) போட்டிகள் நடந்தது. 31ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

Similar News