கோவை: காலவரையற்ற உண்ணாவிரதம் 32-வது நாளாக தொடர்ந்தது!
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.;
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த மார்ச் 19 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள், ஏப்ரல் 16 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். 2022-ம் ஆண்டு வழங்கிய கூலியில் 7% உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி பூபதி கூறுகையில், மின் கட்டணம், பணியாளர் கூலி மற்றும் உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு 30% கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. 7% உயர்வு போதுமானதாக இல்லை என்றும், நியாயமான கூலி உயர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த போராட்டத்தால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் இதுவரை சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 நாட்களாக நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாக தற்போது 12 விசைத்தறி பொறுப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.