பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தி வந்த 321 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சேலம் செவ்வாய்பேட்டை பகுதிக்கு பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் நெய்மண்டி அருணாசலம் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 3 பேர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஒட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நெத்திமேடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 25), மணியனூரை சேர்ந்த மாரிசெல்வம் (29), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இம்ரான் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வந்த காரை போலீசார் சோதனையிட்டனர். இதில் 321 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.