காந்திபுரம்: பேருந்து நிலையத்தில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல்!
35 லட்சம் ரூபாய் பணப்பையோடு நின்று கொண்டிருந்த இருவரை, வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.;
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரு நபர்களை விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, டேப் ஒட்டப்பட்ட பார்சலில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால், போலீசார் அதிர்ச்சியடைந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட நபர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவான் (வயது 43) என்பதும், மற்றொருவர் அவரின் உதவியாளர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சத்தியவானை வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி மதி ஆனந்த் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.