அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற அலுவலர் கைது

குற்றச் செய்தி;

Update: 2025-07-08 16:45 GMT
கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் கே. இளங்கோவன் (60). இவர் சுகாதாரத் துறையில் பூச்சியியல் வல்லுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து 12 பேரிடம் மொத்தம் ரூ. 38.09 லட்சம் வாங்கினாராம். ஆனால், யாருக்கும் அவர் வேலை வாங்கித் தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதனால், பாதிக்கப்பட்ட கும்பகோணம் துக்காச்சியைச் சேர்ந்த ரவி மகன் அருண் (23) தஞ்சாவூர் மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனர்.

Similar News