சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 3,912 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
விபத்தில் 2 கால்களை இழந்தவருக்கு ரூ.46.92 லட்சம் இழப்பீடு;
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை மற்றும் சொத்து பிரச்சினை உள்பட 5 ஆயிரத்து 24 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முடிவில், 3 ஆயிரத்து 912 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.48 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 500 பைசல் செய்யப்பட்டது. திருச்செங்கோடு மலர்குட்டையை சேர்ந்த கார்த்தியேன் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காரில் வந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை கீரம்பாளையம் மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் இவரது கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயனின் 2 கால்களும் நசுங்கியதால் படுகாயம் அடைந்தார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் அறுவை சிகிச்சை செய்து அவரது 2 கால்களும் அகற்றப்பட்டன. இந்த வழக்கு சேலம் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் இந்த விபத்து வழக்கு சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விபத்தில் 2 கால்களை இழந்த கார்த்திகேயனுக்கு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொகைக்கான காசோலையை பாதிக்கப்பட்ட நபருக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். சேலத்தை தொடர்ந்து ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, வாழப்படி, எடப்பாடி பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது.