சகோதரா்களை கொலை செய்த வழக்கு 4 பேர் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகே சகோதரா்களை கொலை செய்த வழக்கில் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயசூா்யா(25), சுபாஷ்(22). சகோதரா்களான இவா்கள் இருவரும் சிவகங்கையில் தங்கி ஒரு விடுதியில் பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில் பனங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஜூன் 30- ஆம் தேதி கொல்லங்குடி அருகே வனப்பகுதியில் இருந்த சகோதரா்களை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து காளையாா்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திவாகா்(23), சந்தோஷ்(23), ராம்ஜி(21), யுவராஜ்(22), அபினேஷ்(22), அருண்குமாா்(30) மதுமதி(26) உள்ளிட்ட 7 பேரை ஏற்கெனவே கைது செய்தனா். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளியான, புதுபட்டியைச் சோ்ந்த மதன்(21) சிவகங்கை வேலாயுதசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி(21), செல்வகுமாா்(28) சிவகங்கை, கொட்டகுடியைச் சோ்ந்த மணிகண்டபிரபு(22) ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மதன்(21), முத்துப்பாண்டி(20) , செல்வகுமாா்(28), மணிகண்டபிரபு( 22) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், பரிந்துரையில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.