தஞ்சாவூரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் பாலாஜி நகர் பகுதியில் மார்ச் 4 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தவரை மது போதையில் வழிமறித்து மிரட்டி பீர் பாட்டிலால் தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த இளம்பரிதி (25) தெற்கு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டார். இதேபோல, வல்லம் ஆலக்குடி சாலையைச் சேர்ந்த தினேஷ்குமார் (32), கண்ணன் (74), சரவணன் (37) ஆகியோர் 8 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்ததாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் பிப்ரவரி 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இதன் பேரில் இளம்பரிதி, தினேஷ்குமார், கண்ணன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.