பரமத்தியில் 4-வது நாளாக ஊர் பொது கிணற்றில் செத்து மிதக்கும் மீன்கள்.
பரமத்தியில் 4-வது நாளாக ஊர் பொது கிணற்றில் செத்து மிதக்கும் மீன்கள் தண்ணீரில் விஷம் கலந்ததா என மக்கள் அச்சம்.;
பரமத்திவேலூர்,ஜூன்.3: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அங்காளம்மன் கோவில் செல்லும் சாலைக்கு எதிரில் கனி ராவுத்தர் தெரு பகுதியில் உப்பு கிணறு என்னும் பரமத்தி ஊர் பொது கிணறு உள்ளது. பரமத்திக்கு காவிரி குடிநீர் திட்டம் வருவதற்கு முன்பு பரமத்தி மக்களின் குடிநீரை தேவையை பூர்த்தி செய்த பிரதான கிணறான இது நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 30 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டது. இந்த கிணற்றில் பரமத்தியில் உள்ள மாரியம்மன், பகவதி அம்மன், அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழா காலங்களில் பக்தர்கள் குளிப்பது, தீர்த்தம் எடுப்பது உள்ளிட்ட ஊர் பொது காரியங்களுக்கு இந்த கிணற்றையும் கிணற்று நீரையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இக் கிணற்றில் இருந்து அவ்வப்போது துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கிணற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்தது பேரூராட்சி பணியாளர்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தி துர்நாற்றத்தை போக்கவும், நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் கிருமிநாசினிகளை தெளித்து சென்றனர். ஆனால் அடுத்த நாளும் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதேபோல் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்து மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கிணற்று நீர் விஷத்தன்மையாக மாறி இருக்குமா அல்லது அக்கினற்றில் யாரேனும் விஷம் கலந்து இருப்பார்களா என்ற சந்தேகத்தில் பீதி அடைந்துள்ளனர். மேலும் இந்த கிணற்று நீர் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் போர் கலந்து மக்கள் தினசரி பயன்படுத்தும் நீருடன் கலந்து பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என அச்சமடைந்துள்ளனர். இதனை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், பேரூராட்சி நிர்வாகம், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக கிணற்று நீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.