வெள்ளகோவில் அருகே புதையல் இருப்பதாக அரசு புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 பேர் கைது
வெள்ளகோவில் பச்சாபாளையம் ஊராட்சி பூசாரி வலசு பகுதியில் உள்ள மண் கரட்டில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் புதையல் இருப்பதாக நிலத்தை தோண்டிய 4 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு. கோழிகள் கொன்று பூஜை;
காங்கேயம் ஓலப்பாளையம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியில் திருமண்கரடு என்ற இடத்தில் சின்னமலை கரடில் முருகன் கோவில் உள்ளது.இதன் அருகேவே சிறிய மலைக்குன்று போல் கற்கள் அடுக்கப்பட்டு அதில் சில குறியீடுகள் இருந்து வந்தது. மேலும் இந்தப் பகுதியில் காணப்படும் கற்கள் இரும்புகள் போல இருந்துள்ளது.2018ம் ஆண்டு ஓலப்பாளையம், பூசாரிவலசு, திருமண்கரடு, மொட்டக்காடு, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இரும்புத்தாது உள்ளதாகவும்,அது குறித்து ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பளவில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பூமியில் இருந்து குறித்த இரும்பு தாதுக்களை வெட்டி எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மண் மாதிரிகள் இடத்தில் பணிகள் முடிவடைந்து இரும்பு செறிவு குறித்து அறிய 3000 அடி ஆழ்துளை கிணறுகள் அமைக்க உள்ள நிலையில் இப்பகுதி பொதுமக்கள் திட்டம் குறித்து தெரிய வந்தது. அதனால் பத்துக்கு மேற்பட்டோர் ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது மட்டுமல்லாமல் அந்தத் திட்டமானது கைவிடப்பட்டது. அதன்பின்னர் இந்த பகுதியில் எவ்வித பணிகளும் மற்றும் ஆய்வுகளும் நடைபெறவில்லை. இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10க்கு மேற்பட்ட நபர்கள் சிறிய மலை குன்றின் மீது சதுரமாக கையிற்ரை சதுரமாக கட்டப்பட்டு கோழிகளை கழுத்து அறுத்து, எலுமிச்சை பழங்கள்,ஏணி,டயர், வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அந்த சிறிய மலைக் குன்றை இடித்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து அப்பகுதியில் என்ன பணி நடைபெறுகிறது என விசாரிக்க சென்ற போது மக்களிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் ஒரு சிலர் அங்கிருந்து காரை எடுத்து தப்பி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்ற நபர்கள் ஊரில் உள்ள பொதுமக்களிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைத்து சாலைகளும் கண்காணிக்கப்பட்டு 4 நபர்களை பிடித்து வைத்துக் கொண்டு வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த 4 நபர்களையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைக்குன்று உடைக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைக்குன்றை இடித்த போது அதனுள் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட கருநாகப் பாம்பு ஒன்று இருந்ததாகவும் அதையும் தாக்கி கொன்று விட்டதாகவும் மேலும் இந்த இடத்தில் இறந்த கோழிகள், மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டும் எலுமிச்சம் பழங்கள் சிதறியும்,ஏணி ஒன்றும் கிடந்துள்ளது. மேலும் இவர்கள் புதையல் தேடி வந்துள்ளனரா அல்லது மனித நரபலி கொடுக்கும் கும்பலா என பல்வேறு வகையில் வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் ஓலப்பாளையம் பகுதியில் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகின்றது. வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணைக்கு கூட்டிசெல்லப்பட்ட நபர்கள் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தை சேர்ந்த குமரேசன், வீரக்குமார், க.பரமத்தியை சேர்ந்த மூர்த்தி , திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த குமரவேல் என்று தெரியவருகின்றது. மேலும் இது குறித்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கின்றனர்.