சந்துக்கடைகள் முற்றிலும் அகற்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் 4 பேர் கைது
குமாரபாளையத்தில் சந்துக்கடைகள் முற்றிலும் அகற்ற வேண்டி போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சந்துக்கடைகளில் மது விற்பனை அதிகம் நடக்கிறது என போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நேற்று அனைத்து பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மேற்கு காலனி, சந்தை பேட்டை, பழைய முருகன் தியேட்டர் ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்ற பாலன், 64, கண்ணப்பன், 54, உத்தமன், 48, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மது குடித்து கொண்டிருந்த பிரபு, 40, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து இன்ஸ்பெக்டர தவமணி கூறியதாவது; குமாரபாளையம் நகரில் சந்துக்கடைகள் எங்கு இருந்தாலும் அவைகள் உடனே அகற்றப்படும். சந்துக்கடைகளே நகரில் இல்லை என்று சொல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.