அல்லாள இளைய நாயக்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2025-01-14 12:30 GMT
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள். சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள். நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயக்கர் இன்றளவும் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழ்கின்ற அக்கால்வாயை அமைத்த அன்னாரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று அல்லாள இளைய நாயக்கர் அவர்களுக்கு ஜேடர்பாளையத்தில் ரூ.21.80 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 28.1.2023 அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான செய்தித்துறையின் மானிய கோரிக்கையின் போது, திரு.அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தை திங்கள் 1-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தை திங்கள் 1-ஆம் நாள் அரசு விழாவை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொன்னாடை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், பரமத்தி வட்டாட்சியர் பி.முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இராஜேந்திரபிரசாத், எஸ்.மலர்விழி, அட்மா குழுத்தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News