குமரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை ஒரு வாரமாக பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42 அடியை எட்டியுள்ளது. 42 அடி நீர்மட்டம் எட்டினால் உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்படுவது வழக்கம். இதனால் நீர்வளத்துறை அதிகாரிகளால் அணையை கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து கடற்கரைகளுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் வசிக்கின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் சார் சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.