தென்காசி மாவட்டத்தில் 4,864 பேருக்கு ரூ. 40.85 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்
4,864 பேருக்கு ரூ. 40.85 கோடி நலத்திட்ட உதவிகள்;
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 4,864 பேருக்கு ரூ. 4.85 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கூடுதல் கட்டடங்கள், பொது சுகாதார அலகு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் விழா நடைபெற்றது. வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை, 25 பேருக்கு ரூ. 2.34 லட்சம் திருமண உதவித்தொகை, 36 பேருக்கு ரூ. 1.02 லட்சம் கல்வி உதவித்தொகை, 57 பேருக்கு ரூ. 12.17லட்சம் இயற்கை மரண உதவித்தொகை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 4,671 பேருக்கு ரூ. 40.49 கோடி வங்கிக் கடனுதவி,15 பேருக்கு ரூ. 7.25 லட்சம் மதிப்பிலான மணிமேகலை விருதுக்கான தொகை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் என, 4,864 பேருக்கு ரூ. 40.85 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பொதுப்பணித் துறை சாா்பில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1. 60 கோடியில் 6 கூடுதல் வகுப்பறைகள், இருபாலா் கழிப்பறைகள், நெட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 21.16 லட்சத்தில் 8 கூடுதல் வகுப்பறைகள், இலத்தூரில் ரூ. 50 லட்சத்தில் பொது சுகாதார அலகு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குருவிகுளம் வட்டம் அய்யனேரியில் ரூ. 45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என ரூ. 23.94 கோடி மதிப்பிலான 22 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்பி, எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், ஊராட்சி வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, வருவாய்க் கோட்டாட்சியா் லாவண்யா, மகளிா் திட்ட இயக்குநா் மதிஇந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளா் (கட்டுமானம்-பராமரிப்பு) அனிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளா்கள் ஜான் ஆசிா், முகம்மது இப்ராஹிம், நிா்மல்சிங், உதவிப் பொறியாளா்கள் மாலிக், சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் ர. சாதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.