சிவன்மலையில் கந்த சஷ்டி 5ம் நாள் விழா - வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதியுலா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலையில் கந்த சஷ்டி விழா 5ம் நாளை ஒட்டி வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2024-11-07 00:08 GMT
காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பக்தர்கள் திருவிழாவில் காப்பு கட்டி பக்தியுடன் ஒரு வாரம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். அதன்படி கடந்த இரண்டாம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விரதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முருகனைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல் இந்த ஆண்டும் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் 5ம் நாள் பூஜையாக காலை மற்றும் மாலை வேளைகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவீதி உலா கட்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சாமியாக வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சுப்பிரமணியசாமி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சன்னதியில் எழுந்தருளினார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News