நத்தக்குளி கிராமத்தை சேர்ந்து 5 பெண்கள் சொத்து பிரச்சனை காரணமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் நத்தக்குளி கிராமத்தை சேர்ந்து ஐந்து பெண்கள் சொத்து பிரச்சனை காரணமாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2025-01-06 07:25 GMT
அரியலூர், ஜன.6- அரியலூர் மாவட்டம் நத்தக்குளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் இறந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் இடத்தை அவரது தம்பி சின்னத்தம்பி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கணவரை இழந்த காசி அம்மாள் தனது கணவரின் சொந்த இடத்தில் வசிக்க அனுமதிக்காமல் மைத்துனர் சின்னத்தம்பி தடை ஏற்படுத்தி உள்ளதாக கூறி காசியம்மாள் செந்துறை காவல் நிலையம், செந்துறை தாசில்தார் அலுவலகம், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை மனு அளித்துள்ளார். இந்த மனுக்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காசியம்மாள் தனது மகள்கள் தீபா ராசாத்தி செல்வராணி மற்றும் தங்கை பெண் கங்கா ஆகிய ஐந்து பேரும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல் பணிகள் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். அதில் சொத்து பிரச்சனை காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டும் அதற்காக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காசியம்மாள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் செந்துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News