குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்னிமடம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் நேற்று ராஜாக்கமங்கலம் பகுதியில் நடைபெற்ற அவர்கள் நண்பருடைய இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர். இன்று அதிகாலையில் காரில் நாகர்கோவிலை நோக்கி புன்னைநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென ஏ ஆர் கேம்ப் சாலையில் செல்வதற்காக திரும்பியுள்ளார். அவர் மீது கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் வேகமாக திருப்பியுள்ளார். அப்போது கார் அதி வேகமாக வந்ததால் நிலை தடுமாறி, கட்டுப்படுத்த முடியாமல் சாலை அருகில் நின்றிருந்த மின் கம்பத்தில் கார் மோதியது. இதில் தலை குப்புற கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து நடந்த நேரம் சாலையில் வாகனங்களோ ஆள் நடமாட்டமோ இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டுள்ளது.