பெண் கொலை வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு 5 ஆண்டு ஜெயில்
சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு;
சேலம் அருகே உள்ள வீராணம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவிராஜன். அவருடைய மனைவி அமுதா (வயது 36). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்த சாக்கடை கால்வாயில் குப்பை கொட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவகுமார் (53), அவருடைய மனைவி செல்வி, மாமியார் தனம், மனைவியின் தம்பி சதீஷ்குமார் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமுதாவிற்கும், சிவகுமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் உள்பட 4 பேரும் அமுதாவை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வீராணம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்வி, தனம், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிவகுமாருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு கூறினார். செல்வி, தனம், சதீஷ்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.