தஞ்சாவூர் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

திருட்டு;

Update: 2025-05-27 16:58 GMT
தஞ்சாவூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிற்குள் புகுந்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே விளார் ரோடு காயிதே மில்லத் நகர் பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவரின் மகன் அந்தோணி ராஜ் (30). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 25 ஆம் தேதி காலையில் அந்தோணி ராஜ் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள தேவாலயத்திற்கு புறப்பட்டார். இதற்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை காலணிகள் வைக்கும் ரேக்கில் மறைவாக வைத்துவிட்டு அந்தோணி ராஜ் திருச்சிக்கு சென்று விட்டார். மீண்டும் அன்று மாலை 4 மணி அளவில் குடும்பத்தினருடன் அந்தோணி ராஜ் வீட்டிற்கு திரும்பினார். வழக்கமாக சாவி வைத்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில்  இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 3 பவுன் நெக்லஸ், மோதிரம் தோடு உட்பட 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.  உடன் இதுகுறித்து அந்தோணி ராஜ் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல்துறை  உதவி ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Similar News