மயிலாடுதுறை புத்தக கண்காட்சியில் ரூ. 50 லட்சம் விற்பனையை எட்டியது
மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் களைகட்டியது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான புத்தங்கள் விற்பனையாகியுள்ளன;
மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் பிப்.10-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இதில், 65 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தினசரி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஆறாம் நாளாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டதால் புத்தகத் திருவிழா மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும், பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. புத்தகத் திருவிழாவில் இதுவரை சுமார் ரூ.50 லட்சம் அளவிலான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.