அனுமதியின்றி சேவல் சண்டை: 50 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை: 50 போ் கைது;

Update: 2025-04-22 07:39 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சட்டையப்பனூா் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். சட்டையப்பனூா் தேவா் மலைக்கரட்டு பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல், ஈரோடு, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா். இவா்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய், 25 காா்கள், 63 இரு சக்கர வாகனங்கள், 31 சண்டை சேவல்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட காா், இரு சக்கர வாகனங்கள், சண்டை சேவல்களையும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

Similar News