திருச்சியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது
யார் அந்த சார் ?என்ற முழக்கத்துடன் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொண்டர்கள் பலரும் கருப்பு உடை அணிந்து யார் அந்த சார்? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் முன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.