திருச்செந்தூர் சூரசம்காரத்திற்கு 500 சிறப்பு பஸ்கள்

திருச்செந்தூர் சூரசம்காரத்திற்கு 500 சிறப்பு பஸ்கள் : ஆலோசனை கூட்டத்தில் தகவல்;

Update: 2025-10-17 09:50 GMT
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரத்தை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திக்கு, கோட்டாட்சியர் கௌதம் தலைமை தாங்கினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுந்தரம், கோவில் உதவி ஆணையர் நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சுகாதாரமான முறையில் பக்தர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் கூடுதலாக 300, நகராட்சி பகுதியில் 100 என மொத்தம் 400 தற்காலிக சுகாதார வளாகம் அமைக்கப்படும். நகராட்சி மற்றும் கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் ெதருநாய்கள் மற்றும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும் வருகிற 27-ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வருகிற 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 700-க்கும் மேற்பட்ட போலீசாரும், 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் 4,600 போலீசார் ஈடுபடுவர். கடற்கரையில் தயார் நிலையில் 5 மீட்பு படகுகள் வீரர்களுடன் நிறுத்தப்படும். கோவில் வளாகம், சன்னதித்தெரு, ரதவீதிகளில் தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோவில் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் வாகனங்களுடனும், ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறத்தப்படும், என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜன், அரசு தலைமை மருத்துவ அலுவலர் பாபநாசகுமார், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீது ஹில்மி, தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம், உதவி பொறியாளர்கள் வெங்கடசுப்பிரமணியன் (கோவில்), புருஷோத்தமன் (பொதுப்பணித்துறை), பரமசிவன் (நெடுஞ்சாலைத்துறை), போக்குவரத்து கழக துணை மேலாளர் வேலுதாஸ், கிளை மேலாளர் ராஜசேகர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News