கஜா புயலை நினைவுபடுத்திய சூறைக்காற்று: 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்தது – 1,600 பாரம்பரிய நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
இயற்கை சீற்றம்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சுற்றுவட்டார பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம், திடீரென சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்தது. இதனால், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, குறிச்சி, புனல்வாசல், ஒட்டங்காடு பகுதிகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அத்துடன் பல இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டது. இதனால் தென்னை விவசாயிகள் நிலை குலைந்தனர். இது குறித்து புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயி வின்சென்ட் அருள்ராஜ் கூறியதாவது: திடீரென வீசிய சூறைக்காற்றுடன் பெய்த மழையால், எங்கள் கிராமத்தில் மட்டுமே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து போனது. மேலும், காய் வரும் பருவத்தில் இருந்த மரங்களில் இருந்து தென்னங்குலைகளும் விழுந்தது. மேலும், திருச்சிற்றம்பலம், குறிச்சி, துறவிக்காடு, வலசக்காடு, மடத்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் என சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. இந்த சூறைக்காற்று கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. சுமார் 20 நிமிடங்களில் தென்னை விவசாயிகள் நிலைகுலையச் செய்து விட்டன. மின்கம்பங்கள் விழுந்து, மின் இணைப்பும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சாரம் சீராக வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார். 1,600 பாரம்பரிய நெல் மூட்டைகள் சேதம் பாலத்தளி கிராமத்தை சேர்ந்த சபரி நிவாஸ் (38), என்பவர், சிங்கப்பூர், துபாயில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் 8 ஆண்டுகளாக சொந்த கிராமத்திற்கு வந்து, இயற்கை வழி விவசாயம் மூலம், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார். பல இயற்கை விவசாயிகளுடன் இணைந்து, மட்பீல்டு என்ற பெயரில், விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக துறவிக்காடு கிராமத்தில் சுமார் நான்காயிரம் சதுர அடியில், சேமிப்பு குடோன் வைத்து உள்ளார். இந்நிலையில் சூறைக்காற்றில் குடோன் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டதால், குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, ரத்தசாளி, பூங்காறு, கிச்சடி சம்பா, தூயமல்லி, தங்கசம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைச் சேர்ந்த 1,600 நெல் மூட்டைகளை மழையில் நனைந்து வீணாகியது.