சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மும்பைக்கு சென்ற 528 கிலோ தங்கம்
பக்தர்கள் காணிக்கையாக சுமார் 528 கிலோ தங்க நகைகளை உருக்கி அவற்றை தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில் முதலீடு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன் மூலம் பெறப்படுகின்ற வட்டிப்பணத்தின் மூலம் அந்தந்த கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கும் மற்றும் திருப்பணிகளுக்கும் செலவிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 528 கிலோ தங்க நகைகளை உருக்கி அவற்றை தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி இன்று ( டிச.27 ) கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, கே. ரவிச்சந்திர பாபு, மாலதி ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் அமைச்சர்கள் கே.என் நேரு, பி.கே சேகர்பாபு, ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் தங்கத்தை ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், உறுப்பினர்கள் பி.பிச்சைமணி, ராஜ சுகந்தி, சே.லட்சுமணன், கோவில் இணை ஆணையர் ஆர்.பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.