சிவகங்கை 533 பவுன் நகைகள் மூலம் ரூ.2 கோடி மோசடி 2பேர் கைது
சிவகங்கை தனியார் வங்கியில் அடகுவைக்கப்பட்ட 533 பவுன் நகைகள் மூலம் ரூ.2 கோடி மோசடி வங்கியின் மேலாளர், பெண் துணை மேலாளர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லலில் உள்ள தனியார் வங்கியில், மேலாளராக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டைகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ்(34), துணை மேலாளராக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புலிக்கண்மாயைச் சேர்ந்த ராஜாத்தி(38) ஆகியோர் பணிபுரிந்தனர். அண்மையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளை மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார்(49) ஆய்வு செய்தபோது, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், வங்கி மேலாளர், துணை மேலாளர் ஆகியோர், 37 பேர் அடகுவைத்திருந்த 533 பவுன் நகைகளை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாகபோலி நகைகளை வைத்திருந்ததும், கையாடல் செய்யப்பட்ட அசல்நகைகளை தங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயரில் மீண்டும் அதே வங்கியில் அடகு வைத்து பணம் எடுத்துள்ளதும் தெரியவந்தது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் மன்னவன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, வங்கி மேலாளர் விக்னேஷ், துணைமேலாளர் ராஜாத்தி ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், ராஜாத்தி பணத்தைக் கொடுத்து வைத்திருந்த ரமேஷ்(48), அவரது மகன் சதீஷ்(21) ஆகியோரையும் பிடித்து, விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார கூறும்போது, 'வங்கி மேலாளர் விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். அதற்காக அடகு வைக்கப்பட்ட நகைகளைக் கொண்டு மோசடி செய்துள்ளார். அதேபோல, துணைமேலாளர் ராஜாத்தி, மோசடி பணத்தை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்துள்ளார்' என்றனர்.