கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீசார் சகாயநகர் விலக்கிலிருந்து லாயம் செல்லுகின்ற சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது செண்பகராமன்புதூரில் இருந்து சகாயநகர் விலக்கு நோக்கி நம்பர் பிளேட் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டதும் வந்த வேகத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பி மீண்டும் செண்பகராமன்புதூர் நோக்கி செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அந்த இரு சக்கர வாகனத்தை துரத்தினர். திடீரென்று இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருந்த வாலிபர் அவர் வைத்திருந்த ஒரு சாக்கு மூட்டையினை சாலையின் ஓரத்தில் தூக்கி எறிந்து விட்டு வேகமாக செல்ல தொடங்கினர். இதனைப் பார்த்த போலீசார் சாக்கு முட்டையை திறந்து பார்த்தபொழுது அதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் போன்று தெரிய வந்தது. போலீசார் உடனடியாக சாக்கு மூட்டையினை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் காவல் நிலையம் வந்து போலீசாரால் கைப்பற்றப்பட்ட 5.6 கிலோ திமிங்கலம் உமிழ்நீரினை பெற்றுக் கொண்டனர். மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.