கோவை மாவட்டத்தில் 6 மாதங்களில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி - மாவட்ட ஆட்சியர் தகவல் !

தெருநாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.;

Update: 2025-04-18 00:42 GMT
கோவை மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக NGOக்கள் மூலம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஆறு மாத காலத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி மட்டுமின்றி ஊராட்சி பகுதிகளிலும் இப்பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த ARV தடுப்பூசியின் மூலம் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்தாலும் பாதிப்பு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கோவை மாவட்டத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். வரும் 27ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரடி ஆய்வு நடத்தப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறினார். பொள்ளாச்சி அருகே மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரித்து வருவதாகவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் வெவ்வேறு கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க RTOவுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பல பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Similar News